உங்களிடம் நான் மூன்று முக்கியமான விண்ணப்பங்களை முன்வைக்கிறேன் – தமிழருவி மணியன் வேண்டுகோள்

posted in: செய்திகள் | 2

அன்பிற்கினிய நண்பர்களுக்கு !

அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். என் மனப்புண்ணுக்கு மருந்து தேடும் வகையில் காந்திய மக்கள் இயக்கப் பணிகளில் இருந்து நான் கொஞ்சம் விலகி நிற்க வேண்டிய நிர்பந்தம் உருவெடுத்து இருந்தாலும், இந்த இயக்கம் குறித்த சிந்தனைகள் என் உணர்வுகள் அனைத்தையும் ஊடுருவி நிற்கின்றன, என் உடலெங்கும் பாயும் இரத்தத்தில் இரண்டறக் கலந்துள்ளன என்பதுதான் பொய்யின் நிழல் படாத நிஜம். மகாத்மா காந்தியை நம் தமிழகத்து மண் என்றும் மறந்து விடாமல் இருக்கவும், அவர் வளர்த்தெடுத்த பொது வாழ்க்கைப் பண்பு நலன்களை இன்றைய இளைய சமுதாயத்தின் இதயங்களில் கொண்டு சேர்க்கவும், மரபார்ந்த நம் பண்பாட்டுப் பாரம்பரிய விழுமியங்களை அரசியல் களத்தில் மீட்டெடுக்கவும் காந்திய மக்கள் இயக்கம் என்றும் தவிர்க்க முடியாமல் தழுவிக் கொள்ளும் ஓர் இயக்கமாகவே நிச்சயம் இருக்கும்.

நம் மண்ணின் மக்களை சாதி அரசியல் பிரிக்கிறது; மத அரசியல் பிளவு படுத்துகிறது; மொழி சார்ந்தும் இனம் சார்ந்தும் செயற்படும் அரசியல் வெறுப்பு நெருப்பை வளர்க்கிறது; வர்க்க அரசியல் வேற்றுமைகளை விதைக்கிறது. இன்று தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் ஒற்றை மையப்புள்ளியில் மக்கள் அனைவரையும் இணைத்து வைக்கும் வேலையில் ஈடுபடவில்லை. அந்தந்த அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்தும் தலைமைகளின் அந்தரங்க வேட்கை சார்ந்தும் மக்கள் சமூகம் பிளவுபடுத்தப்படும் சூழலில், சாதி-மதம்-இனம்-வர்க்கம் என்ற எல்லாவிதமான பேதங்களையும் கடந்து அனைவரையும் ஒருங்கிணைத்து, சம உரிமையும் சம வாய்ப்பும் பகிர்ந்தளித்து ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் நடைமுறைத் தத்துவமாக காந்தியம் மட்டுமே தரிசனம் தரமுடியும். இந்த உண்மையை நம் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றச் செய்வதையே காந்திய மக்கள் இயக்கம் தன் முதன்மையான பணியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே என் நெஞ்சு நேர்ந்து கொண்ட தவமாகும்.

நண்பர்களே …

அன்றாடம் அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் தம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு கட்சியும் அறிக்கைகளைக் கொடுப்பதும் ஆர்பாட்டங்களை நடத்துவதுமாக இருக்கின்றன. சமூகத்தின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பிரச்சினை மக்களைப் பாதிக்கக் கூடிய நிலை இருந்தால், அதற்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடலாம். ஆனால், திரும்பும் திசையெங்கும் பிரச்சினைகள் பல்கிப் பெருகிக் கிடக்கின்றன. இவற்றிற்கு முடிவு கட்ட தன்னலம் துறந்த, ஒழுக்கம் நிறைந்த, நெறி சார்ந்து இயங்குகின்ற சமூக நலன் குறித்து சதா சர்வகாலமும் சிந்திக்கின்ற ஓர் அறிவார்ந்த மக்கள் கூட்டம் ஒன்று சேர வேண்டும். இன்று தமிழகத்தின் பொது வாழ்வில் பொய்மையும், போலித் தனமும் இல்லாத, உண்மையும் ஒழுக்கமும் நிறைந்த ஓர் இயக்கம் தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது தமிழ்ச் சமூகச் சூழலில் நல்லதை நாடும் நண்பர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக்கும் உன்னத முயற்சியில் காந்திய மக்கள் இயக்கம் பூரணமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இன்றுள்ள சூழலில் நீங்கள் வெறெதுவும் செய்ய வேண்டாம். நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்த, மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை வளர்த்தெடுக்க ஆதரவுக் கரம் நீட்டிட நான் தயார் என்ற நிலைப்பாடு உள்ளவராயின், உங்களை காந்திய மக்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். முதலில் நல்லவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடுவோம். எண்ணிக்கையே ஜனநாயகத் தர்மம் என்றாகிவிட்ட நிலையில் பிறர் பார்த்து வியக்கும்படி நமது இயக்க உறுப்பினர்கள் எண்ணிக்கையை இலட்சக் கணக்கில் பெருக்குவோம். தமிழக அரசியலில் காந்திய மக்கள் இயக்கம் அறிவார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, உண்மை சார்ந்த நெறியிலிருந்து வழுவாத மக்களைக் கொண்ட தவிர்க்க முடியாத அரசியல் சக்தி என்பதை நிலை நிறுத்துவோம். அதற்குப் பிறகு சமுக வீதிகளில் ஒவ்வொரு தீமைக்கும் எதிராக அறம் சார்ந்த வழியில் களம் காண்போம். உங்களிடம் நான் மூன்று முக்கியமான விண்ணப்பங்களை முன் வைக்கிறேன்…

1. காந்திய மக்கள் இயக்கத்தில் உடனடியாக உறுப்பினராக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

2. வணிகம் சார்ந்த எந்த மலினமான சமரசத்திற்கும் உட்படாமல் மாதந்தோறும் மிக மேன்மையாக வலம் வரும் “ரௌத்திரம்” இதழின் ஆண்டு சந்தாவாக ரூ.180/- யை உடனடியாக அனுப்பி வையுங்கள்.

3. ஏழையும் பாழையும், அனாதையும் அகதியும் பயன்படும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கும் காந்திய மக்கள் இயக்க அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பதுடன், இந்த இயக்கம் பொருளாதாரச் சிரமமின்றி தொடர்ந்து இயங்குவதற்கும் உங்களால் இயன்ற பொருளதவியை மாதந்தோறும் தவறாது அனுப்பி வையுங்கள்.

நான் பிறந்த மண்ணையும், என் தமிழ்ச் சமூகத்தையும் முற்றாகத் தவிர்த்துவிட்டு வெகுதூரம் விலகிச் செல்ல என்றும் என் மனச்சான்று இம்மியளவும் இடம் தராது. விரைவில் மீண்டும் நான் வேகமாக வருவேன். இறைவன் எனக்களித்திருக்கும் ஆற்றல் முழுவதையும் இந்த இயக்கதிற்குப் புத்துணர்ச்சியுடன் அர்ப்பணிப்பேன். என் வருகை உங்கள் உறுப்பினர் எண்ணிக்கைப் பெருக்கத்தையும் , பொருளாதாரச் சுமையை விருப்புடன் பகிர்ந்து கொள்ளும் பேருதவியையும் பொறுத்தே வேகப்படும்.

அன்புடன்,

தமிழருவி மணியன்

குறிப்பு :
*************

தங்களை இயக்கத்தில் இணைத்துக்கொள்ள கீழ்காணும் ஏதேனும் ஒரு வழிமுறையை பின்பற்றவும் :
————————————————————————————-

1. தங்களின் பெயர் , வசிக்கும் மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை 7667191191 என்கின்ற எண்ணிற்கு அழைத்து பதிவு செய்யவும் அல்லது SMS மூலம் அனுப்பவும் .

2. தங்களின் பெயர் , அலைபேசி எண் , தாங்கள் வசிக்கும் மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை [email protected]க்கு மின்னஞ்சல் செய்யவும்.

3. இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்யhttp://www.gandhiyamakkaliyakkam.org/…/apply-for-a-members…/

சந்தா செலுத்த வழிமுறைகள் :
—————————————————-

1. வங்கி கணக்கு வழியாக செலுத்துவதற்கு

Name : ROWTHIRAM
Branch : Punjab National Bank , Periamet , Chennai.
Account No : SB A/C 3613 0021 0004 1993
IFSC Code : PUNB0361300

2. இணையதளத்தில் படிக்க

http://www.rowthram.in/rowthiram-subscriptions/

நன்கொடை வழங்க :
————————————

1. http://gandhiyamakkaliyakkam.org/donations/

2. NEFT / IMPS

Name : GANDHIYA MAKKAL IYAKKAM
Branch : Punjab National Bank , Periamet , Chennai.
Account No : SB A/C 3613 0021 0004 2822
IFSC Code : PUNB0361300

2 Responses

  1. s.Balasubramanian

    I had sent a membership willingness profoma my member ship willing ness have been approved still not yet receive id please do the need full.thank you.

Leave a Reply

Your email address will not be published.