ஓர் உண்மை விளக்கம்

நக்கீரன் இதழில் தலித் தலைவர்கள் ஆடை அணிவது தொடர்பாக நான் சொன்னதாக அச்சேறியிருக்கும் சில செய்திகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பதாக அறிகிறேன்.

பொதுவாக நான் முகப்புகளில் பார்வையைச் செலுத்துவதும் இல்லை. அவற்ற…ில் வழங்கப்படும் கருத்துக்களுக்கு எல்லாம் எதிர்வினை ஆற்ற விரும்புவதும் இல்லை. பிறருடைய தவறுகளை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருப்பது போன்றே என்னுடைய சொல்லிலும், செயலிலும் என்னை அறியாமல் செய்துவிடும் தவறுகள் ஏதேனும் இருந்தால் அவை விமர்சனங்களுக்கு உரியவையே என்பதில் எனக்கு இரண்டு கருத்துக்கள் இல்லை. பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துவிட்ட யாரும் விமர்சனங்களுக்கு உட்பட்டவரே. ஆனால், விமர்சனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பதுதான் மிகவும் அவசியம்.

524811_311772948940402_172622874_n
நக்கீரன் இதழுக்கு நான் பேட்டி தரவும் இல்லை, கட்டுரையாகவும் எதையும் எழுதி வழங்கவும் இல்லை. சிவகாசியில் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் ஓர் உள்ளரங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்க எந்த பத்திரிகையாளரும் அழைக்கப்படவும் இல்லை. நக்கீரன் இதழிலிருந்து ஒரு நிருபர் யாருடைய அனுமதியைப் பெற்று எப்படி உள்ளே வந்தார் என்பதை நான் அறியேன்.

அகத்திலும் புறத்திலும் வேறு வேறாய் வாழ்பவர்களுக்கு ஒளிவு மறைவு இருக்கலாம். இதுவரை அப்படி எதுவும் எனக்கு இல்லாததால் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் நான் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. கலந்துரையாடலில் பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு என்னால் இயன்றவரை தெளிவான பதிலைத் தர முயன்றேன். ஒரு கல்லுரி மாணவி காந்தியை தலித் தலைவர்கள் மேடைகளில் தாக்கிப் பேசுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

காந்தியைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல், அம்பேத்கரைப் பற்றி முழுமையான தெளிவும் இல்லாமல், பூனா ஒப்பந்தத்தை மட்டுமே முன்னிறுத்தி மகாத்மாவை மிகத்தரக்குறைவாக தலித் மேடைகளில் விமர்ச்சிக்கும் வழக்கம் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. காந்தியைப் போன்று வாழ்வது அனைவருக்கும் எளிதானது அன்று. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் அரை ஆடையில் வாழ்க்கை நடத்தும் அவலத்தைக் கண்ணுற்று அவர்கள் தன்னை நெஞ்சுக்கு நெருக்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இருபது முழத்தில் தலை முதல் கால்வரை ஆடை அணியும் குஜராத்திய வழக்கத்தைப் புறம் தள்ளி அரை நிர்வாணக் கோலம் ஏற்றார்.

இந்திய வைஸ்ராய் மாளிகையில் நுழைந்த போதும், லண்டனின் பக்கிங்காம் அரண்மனையில் அடியெடுத்து வைத்தபோதும் சர்ச்சில் சொன்னதைப் போனறு அரை நிர்வாணப் பக்கிரியாகத்தான் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மக்களிடையே ஒரு தலைவன் ஆடை முதல் அனைத்திலும் தன்னை அன்னியப்படுத்திக் கொள்ளல் ஆகாது என்பது தான் அண்ணலிடம் நாம் அறிய வேண்டிய பாடம்.

அம்பேத்கரைப் போல் காந்தியும் மேல்நாட்டுப் படிப்பை கற்றவர்தான், பேரிஸ்டர் பட்டம் பெற்றவர் தான். லண்டனில் மாணப் பருவத்தில் சூட்டும் கோட்டுமாக காட்சி தந்தவர் தான். ஆனால், ஏழை இந்தியர்களின் வாழ்வை மேம்பபடுத்துவதற்காகவே வேள்வி நடத்துவது என்று முடிவு எடுத்த நிலையில் உள்ளத்தால், வாழ்வியலால், உடையால் ஏழையாகவே காட்சி தந்தார் அண்ணல். அவர் பிர்லா மாளிகையில் இருந்தபோதும், அங்கிருந்த வசதி வாய்ப்புக்களை அனுபவித்தவர் இல்லை. அவருக்கு எதிராக வைக்கப்படும் எல்லா விமர்சனங்களுக்கும் இங்கே விரிவாக பதில் அளிப்பது என் நோக்கம் இல்லை.

தமிழகத்தில் 1 கோடி தலித் மக்கள் உள்ளனர். அன்று பாரதி சொன்தைப் போல் இன்னும் மக்கள் தொகையைலில் “6ல் 1” பங்கு. இந்த 1 கோடி தலித் மக்களில் நன்றாக ஆடை அணியும் வாய்ப்பைப் பெற்றவர்கள் எத்தனை பேர் ? கான்கிரீட் கட்டடங்களில் உறங்குபவர்கள் எத்தனை பேர் ? மூன்று வேளை உணவு முழுமையாக உண்பவர்கள் எத்தனை பேர் ? அவர்களுடைய பிள்ளைகளில் உயர்கல்வி பெற்றவர்கள் எத்தனை பேர் ? அரசுத் துறைகளில் உயர் அதிகார இருக்கையில் கம்பீரமாக அமரும் வரத்தைப் பெற்றவர்கள் எத்தனை பேர் ?

வெறிபிடித்த சாதி இந்துக்களின் மேட்டிமையால் சுரண்டப்பட்ட சமுதாயமாகவே தலித் இனம் ஆயிரம் இன்னல்களை அனுபவித்து வருகிறது, ஒவ்வொரு தலித்தும் விதம் விதமாக உடுத்த வேண்டும். வகைவகையாக உண்ண வேண்டும், நியாயமான உரிமைகள் அனைத்தும் அடைய வேண்டும், அறத்திற்கு உட்பட்ட சுகங்கள் முழுமையாக பெற்று மகிழ வேண்டும் என்பது தான் எப்போதும் என் தாகமாகவும், தவிப்பாகவும் இருந்து வருகிறது. வெற்று உடம்புடன் வயல் வெளிகளில் நின்றபடி அரை வயிற்று கஞ்சியுடன் பசியாறி, அன்றாடம் வாழ்க்கையையே ஓர் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கும் பல லட்சம் தலித் மக்களுக்கு தலைவர்களாக இருப்பவர்கள், அவர்கள் அணியும் விலை உயர்ந்த ஆடைகளின் மூலம் அன்னியப்பட்டு விடலாகாது என்பது தான் நான் அங்கே வைத்த கருத்து.

இன்றைய தலித் தலைவர்கள் தலித் மக்களி வாழ்க்கை மேம்பாட்டுக்காகவே தங்களை முற்றாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இல்லை என்பது தான் என்னுடைய அழுத்தமான அபிப்ராயம். எந்த அச்சுறுத்தலுக்காகவும், கேவலமான விமர்சனங்களுக்காகவும இந்த உண்மையை மறைத்துப் பொய் உரைக்க என்னால் இயலாது.

நான் காசுக்காக கூட்டங்களில் பேசுவதாகவும், விளம்பரத்திற்காக எதையும் வாய்திறந்து சொல்வதாகவும் நிரம்ப நியாய உணர்வுடன் நேர்மையின் வடிவமாக(?) வாழும் ஓர் நண்பர் தன் கருத்தை முகப்பில் பதிவு செய்திருப்பதாக அறிகிறேன். இந்த மண்ணில் என்னைப் போல் குறைந்த தேவையுடன், நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள் மிக மிக குறைவு.

அன்று முதல் இன்றுவரை நான் எளிமையாக இருக்கிறேன். என் வாழ்வு உண்மை சார்ந்து ஒரு தவம் போல் நடக்கிறது. எனக்கு என்று ஒரு சொத்தும் இல்லை. வசதியற்று வாழவேண்டும் என்று என் மீது இறைவன் விதி ஒன்றும் எழுதவில்லை. எனக்குள்ள ஆற்றலைப் பயன்படுத்தி சந்தர்ப்பவாதங்களை சாமர்த்தியமாக மாற்றி ஒரு குபேரனாகவே வாழ முடியும். என்னளவில் அது வாழ்தல் இல்லை, பிழைத்தல்.

வாரத்திற்கு ஒரு நாள் என்று ஒரு மாதத்தில் 4 நிகழ்ச்சிகளுக்கு மதிப்பூதியம் பெறுகிறேன். எனக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ள பிள்ளைகளின் உயர் கல்விக்காக முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய வாழ்வை, சமூக நோக்கத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு பேனா எடுப்பதற்கு முன்பு நான் பெறும் மதிப்பூதியத்தால் முனைவர் பட்டம் வரை கல்வியைப் பெற்றிருக்கும் பல தலித் பிள்ளைகளிடம் நேரில் கேட்டு அறிவது நலம்.

எந்தப் புரிதலும் இல்லாமல் அச்சேறிய செய்தி உண்மைதானா என்று அறியாமல் அவசரம் அவசரமாக ஒருவனை கொச்சைப்படுத்துவதன் மூலம் அவர்கள் தங்களுடைய பண்பு நலன்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்களே தவிர அதனால் எனக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவது இல்லை.

நிறைவாகச் சொல்கிறேன்….
எல்லா தலித் மக்களும் விலை உயர்ந்த் ஆடைகளை விதம் விதமாக உடுத்துங்கள், சுவை நிறைந்த உணவுகளை சுகமாக உண்ணுங்கள். அறிவார்ந்த கல்வியை அனைவரும் அடையுங்கள். குடிசைகளை முற்றாக தவிர்த்து கான்கிரீட் கட்டடங்களில் வசதியாக வாழுங்கள். இவற்றை எல்லாம் உங்களுக்கு செய்து தருவதற்காக பிறப்பெடுத்திருக்கும் தலைவர்கள் மட்டும் ஏழையராகவும், எளிமையாகவும் வாழ்வதுதான் சிறப்பு என்பதை உணருங்கள்.

அன்புடன்,
தமிழருவி மணியன்
தலைவர், காந்திய மக்கள் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published.