திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்காதது வேதனைக்குரியது: தமிழருவி மணியன்

அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொண்ட திருக்குறளை தேசிய நூலாக இன்னும் அறிவிக்காதது வேதனைக்குரியது என்றார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.
ராசிபுரம் தமிழ்ச் சங்கத்தின் 18-ஆம் ஆண்டு விழா ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பெ.குழந்தைசாமி தலைமை வகித்தார். செயலர் வி.கே.அரங்கநாதன் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் சி.ரத்தினம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழருவி மணியன் “வான்புகழ் வள்ளுவம்’ என்ற தலைப்பில் மேலும் பேசியது:


தமிழில் படைக்கப்பட்ட சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் போன்றவை அழிவில்லாதது. ஆனால், இதனை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. இன்று சங்க இலக்கியங்களை யார் பேசுவது, இளைஞர்களிடம் யார் கொண்டு சேர்ப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. தாயை போன்று புனிதமானது தமிழ். ஆனால், இன்று வீடுகளில் மம்மி, டாடி என்கின்றனர்.
இதனால் தமிழ் வாழுமா, இன்னும் 100 ஆண்டுகளில் உலகில் 50 மொழிகள் அழிந்துவிடும் என ஐ.நா. கூறுகிறது. இந்தப் பட்டியலில் தமிழும் உள்ளது. மெல்ல தமிழ் இனி சாகும் என கூறுவது வேதனையளிக்கிறது. 6,000 உலக மொழிகளில் 6 மொழிகள் தான் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. இதில் இந்திய நாட்டில் மட்டும்தான் இரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து. அது வடக்கில் சமஸ்கிருதம், தெற்கில் தமிழுக்கு. மற்றொரு செம்மொழியான லத்தீன் வழக்கில் இல்லாமல் அழிந்துவிட்டது. 300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் லத்தீன் பேசினால் தான் உயர்வாக எண்ணுவர். லத்தீன் மொழியில் நூல் எழுதினால் பெருமையாக கருதுவர். நீதிமன்றத் தீர்ப்புகளும் லத்தீன் மொழியிலேயே இருந்தது. இப்படிபட்ட மொழி உயிரோடு இல்லை.
இன்று உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலேயே தீர்ப்புகள் உள்ளன. கேட்டால் ஆங்கிலத்தில் தான் புரிந்துகொள்ளும் அளவிற்கு தீர்ப்பளிக்க முடியும் என்கின்றனர். உலக நாடுகளில் அவரவர் தாய் மொழியில் பேசும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தான் ஆங்கிலம் பேசிவதை உயர்வாக கருதுகின்றனர். அனைத்தையும் அறிந்து கொள்வது தவறில்லை. ஆனால், தாய் மொழியை எங்கிருந்தாலும் மறக்கக்கூடாது.
மகாத்மா காந்தி, நேதாஜி ஆகியோர் அடுத்த பிறவியிருந்தால், தமிழனாக பிறக்க வேண்டும் எனக் கூறினர். திருக்குறளை அதன் சொந்த மொழியில் படிக்க நான் தமிழனாக பிறக்கவில்லையே என காந்தியடிகள் எண்ணினார். அப்படிபட்ட பெருமைக்குரியது தமிழில் எழுதப்பட்ட திருக்குறள்.
இப்படிபட்ட நூலை இன்று மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே படிக்கின்றனர். சமூக ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம் கற்றுத் தருவது திருக்குறள். வள்ளுவம் சொன்னபடி வாழப்பழகிக்கொள்ள வேண்டும். ஆனால், இன்று திருக்குறள் படி நடக்கும் ஒரு அரசியல்வாதியைக்கூட பார்க்க முடிவதில்லை. பகவத் கீதை, திருக்குரான், பைபிள் போன்றவை சமயம் சார்ந்தவை. ஆனால், திருக்குறள் ஒன்றே சமய சார்பற்று அனைத்து பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப்படிபட்ட நூலை தமிழகத்தை சேர்ந்த 40 எம்பிக்கள் நினைத்திருந்தால் தேசிய நூலாக அறிவித்திருக்க முடியும். ஆனால், பதவிக்கு போராடும் அவர்களுக்கு இதில் அக்கரையில்லை. தமிழுக்கு செம்மொழி என சொல்லிவிட்டால் என்ன பயன்வந்து சேர்ந்துள்ளது. இலக்கிய காலங்களில் இருந்த இரக்கம், கொடை போன்ற பண்புகள் எங்கே போனது.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது எங்கே போனது இரக்கம் என எண்ணிப்பார்க்க வேண்டும். எப்படி இருந்த இனம் இப்படி உள்ளதே என எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது தான் தமிழ் வாழும் என்றார்.

Source  and Thanks : Dinamalar

Leave a Reply

Your email address will not be published.