நிவாரணப் பணிகளில் அனைவரும் இணைந்து ஈடுபடுவோம்

posted in: Uncategorized | 0

சென்னை, நவ. 17–
காந்திய மக்கள் இயக்கம் தலைவர்

தமிழருவிமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை மாநகரத்தை சிங்கப்பூர் ஆக்குவோம் என்று கடந்த 48 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தை அலங்கரித்து வரும் 2 திராவிடக் கட்சிகளும் வாய் கூசாமல் வசீகரமான வார்த்தைகளில் வாக்குறுதி வழங்கின.
ஆனால், 5 நாட்கள் பெய்த சாதாரண மழையைக் கூட தாங்க முடியாமல் இன்று ஒட்டுமொத்த சென்னையும் தத்தளிக்கிறது.
2005–ல் பெய்த பெருமழையில் விளைந்த கடும் சேதங்களை கண்ட பின்பும் கடந்த 10 ஆண்டுகளில் 2 திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் முறையாக மழைநீரை சேகரிக்கவும், பழுதடைந்த கால்வாய்களை கட்டமைக்கவும், நீர்நிலைகளை தூர்வாரவும் உருப்படியாக எந்த பணியும் செய்யப்படவில்லை.
நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட 40 ஆயிரம் நீர்நிலைகளில் பெரும்பாலானவை 2 திராவிட கட்சிகளின் ஆட்சி காலங்களில் தீவிர ஆக்கிரமிப்புக்குள்ளாயின. தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ் நிலங்களெல்லாம் வீடு கட்டும் இடங்களாக மாற்றப்பட்டன.
தமிழகத்தில் பாயும் 17 சிறிய, பெரிய ஆறுகள் ஒன்றிணைக்கப்படுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்பு திட்டம் இன்று வரை முழுமைப் பெறாமல் முடங்கி கிடக்கிறது.
சரியான திட்டமிடல் இன்மையால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 177 டி.எம்.சி. தண்ணீர் பயன்பாடின்றி வீணாகிறது.
இந்த நிலையில் வெள்ள நிவாரண பணிகளால் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. புதிது புதிதாய் இலவச திட்டங்களை அறிவித்து வாக்கு வங்கியை வளர்த்தெடுப்பதை தவிர இந்த 2 திராவிட கட்சிகளுக்கும் மக்கள் நலன் காக்கும் திட்டங்களை தீட்டுவதில் எந்த அறிவியல் பார்வையும் இல்லை.
ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயல்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடி கண்டுபிடித்து மாற்று அரசியலை மலர செய்ய வேண்டும்.
ஆயிரம் தவறுகள் இருந்தபோதிலும் அரசியல் கருத்து வேற்றுமைகளை மீறி, நிவாரண பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபடுவதுதான் இன்றைய அவசர தேவை. காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும் தங்களால் இயன்ற அளவு விளம்பர வெளிச்சமின்றி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.