பற்றி எரியும் விலைகள்… பதறும் மக்கள்…

09 07 2021

பற்றி எரியும் விலைகள்… பதறும் மக்கள்…

எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு உருளை விலையும், தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில், எரிபொருள் விலை சதம் அடித்து விட்டது. எரிவாயு உருளை விலை, கடந்த ஜூன் மாதத்தில் 825 ரூபாய் இருந்தது, இன்றைக்கு 850 ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது; வருகின்ற காலங்களில், ரூபாய் ஆயிரத்தை எட்டிவிட வாய்ப்புகள், “பிரகாசமாக” உள்ளது. வேளாண் விளைபொருட்கள், தொழிற்சாலை உற்பத்திகள், அவைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் போக்குவரத்திற்கு, வாகனங்களை சார்ந்திருக்கின்றன. வாகனங்களை இயக்கத் தேவையான எரிபொருள் விலை தாறுமாறாகத் தொடர்ந்து உயர்வது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கின்றது. 

கச்சா எண்ணெய் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை என்றாலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் போது இதைவிட விலை அதிகமாக இருந்த நேரத்தில், அதாவது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 112 அமெரிக்க டாலராக இருந்த போது கூட, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69 ஆகத்தான் இருந்தது. அப்படியானால் இப்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 75.76 டாலர்தான் என்ற நிலையில் ஏன் இந்த விலை என்று நினைத்தால், அதற்கு முழு முதற்காரணம் மத்திய அரசாங்கத்தின் கலால் வரி தான். பெட்ரோலின் அடிப்படை விலையில் 58 சதவீதம் மத்திய கலால் வரியும், மாநில வரிகளும் சேர்ந்து விடுகின்றன. இதேபோல் டீசல் மீது 52 சதவீதம் விலை ஏறிவிடுகிறது. 

இன்றைய சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு, அடிப்படை கலால் வரி, சிறப்புக் கூடுதல் கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேல் வரி, வேளாண்மை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மேல் வரி என்ற வகையில் ரூ.32.90 வசூலிக்கிறது. டீசலுக்கு ரூ.31.80 வசூலிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதங்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13-ம், டீசலுக்கு ரூ.16-ம் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2, 3 மாதங்களாகப் பொதுமக்கள் பெட்ரோல்-டீசல் வாங்குவது பெருமளவில் குறைந்திருக்கிறது என்றாலும்,  அரசின் வரிவசூல் பெருமளவில் உயர்ந்திருக்கிறது.

சென்னையில் இல்லத்தரசிகள் சமையலுக்குப் பயன்படுத்தும் எரிவாயு உருளையின் விலையும் ஒரே நாளில் ரூ.25.50 உயர்ந்திருக்கிறது. உணவு விடுதிகள், தேநீர்க் கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் உருளைகளின் விலை ரூ.84 உயர்ந்திருக்கிறது. நிச்சயம் உணவு விடுதிகளில், உணவுப் பண்டங்கள் விலை உயரும் அபாயம் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் வீட்டு உபயோக உருளை விலை ரூ.610.50 ஆக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் ரூ.240 உயர்ந்து இப்போது ரூ.850.50 ஆகிவிட்டது. 

7 பைசா உயர்வுக்கே மாட்டு வண்டி கட்டி நாடாளுமன்றம் சென்றவர்கள், இன்று நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கட்சியாக இருந்தும் இவற்றின் விலையைக் கட்டுப்படுத்துவதில் எந்தக் கவனமும் செலுத்துவது இல்லை; மாறாக விலை உயர்வுக்குத் தாராளமாகப் பச்சைக் கொடி காட்டுகிறார்கள். மேலும், இனிமேல் விலை உயராது என்று எவரும் சொல்லத் தயாரில்லை. இது மத்தியில் என்றால் மாநிலத்தில் ‘எரிபொருள் விலையை எப்போது குறைப்பீர்கள்? கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று?’ என்று கேட்டால், மெத்தப்படித்த தமிழக நிதியமைச்சர் ‘குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தோம், தேதி குறிப்பிட்டோமா?’ என்று எதிர்க் கேள்வி கேட்கிறார். சாமானிய மக்கள் வேலை இழந்து, வருமானம் குறைந்து, பசிப்பிணி போக்க வழி தெரியாமல், வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் இவர்களோ வார்த்தை விளையாட்டு நடத்துகிறார்கள். 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாதாரண ஏழை-எளிய மக்கள் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படுவதோடு இல்லாமல், போக்குவரத்துக் கட்டணமும் உயரும் என்ற வகையில் அனைத்து பொருட்களின் விலையும் இனி உயர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. உலகில் 114 நாடுகளில் இந்தியாவை விட மிகக் குறைந்த அளவில் தான் பெட்ரோல் விலை இருக்கிறது. ஏற்கனவே கொரோனாவால் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் மக்களால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வையும், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வையும் நிச்சயமாகத் தாங்கமுடியாது. எனவே பெட்ரோல்-டீசல் விலையையும், சமையல் எரிவாயு உருளை விலையையும் குறைப்பதற்கு உரிய வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மக்களைக் காக்க வேண்டும் எனக் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்,

காந்திய மக்கள் இயக்கம்.

தொடர்புக்கு: 98410 20258  

Fuel-Price-Hike-09072021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *