பிணி தீர்க்குமா ஈழ பிக்னிக்? – தமிழருவி மணியன்

posted in: கட்டுரைகள் | 1

‘உயர்ந்த விஞ்ஞானியாவதற்கு ஒருவன் அறிவியலில் ஆழ்ந்த ஞானம் அடைய வேண்டும். தேர்ந்த வழக்கறிஞராகவோ, சிறந்த மருத்துவராகவோ வர விரும்பினால், சட்டமோ, மருத்துவமோ முறையாகக் கற்றாக வேண்டும். ஆனால், ஓர் அரசியல்வாதியாக உருவாவதற்குத் தன்னுடைய சொந்த நலன்களைப் பராமரிக்கத் தெரிந்தால்… அதுவே போதும்’ என்றார் அறிஞர் மேக்ஸ் ஓரேல். ஈழத் தமிழர் விவகாரத்தில் நம் அரசியல் தலைவர்கள் அரிதாரம் பூசாமல் அன்றாடம் நடிக்கும் நாடகங்களைப் பார்த்தால், இந்தப் பொன்மொழிதான் பொருத்தமாகப்படுகிறது.

ஈழம் ரத்த நிலமானபோது, அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரவர் படுகொலை செய்யப்பட்டபோது, எம் குலப் பெண்டிர் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டபோது, வயது முதிர்ந்தோரும், வாய் திறந்து பேசவியலாத சின்னஞ்சிறாரும் வெடிகுண்டுகளில் உடல் சிதறி உருக்குலைந்தபோது, உயிரிழந்தும் உறுப்பிழந்தும் உடைமையிழந்தும் எழுத்தில் வடிக்க முடியாத பேரழிவைச் சந்தித்து நம் தமிழினம் கண்ணீர்க் கடலில் மூழ்கிய போதும்… இந்திய அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?

தமிழ் இனத்தை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதங்கள் தந்த போது, தெலுங்கானா காங்கிரஸ்காரர்களைப்போல், அன்னை சோனியாவின் அருட்பார்வைக்கு அன்றாடம் தவமிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் இனஉணர்வுடன் தொண்டர்களைத் திரட்டி தெருவில் நின்று குரல் கொடுத்தார்களா? நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி ஆட்சி பீடத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்களா? இல்லையே. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பா.ஜ.க., மன்மோகன் சிங் அரசின் தவறான அணுகுமுறைகளால் ஈழம் எரிந்த போது, அதைத்தடுக்க எந்தெந்த வகைகளில் முயற்சி மேற்கொண்டது? அந்த நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர், தன் பதவி பறிபோகாமல் பாதுகாத்துக்கொள்வதற்கு நடத்திய நாடகங்கள் ஒன்றா? இரண்டா?

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அனைத்து வாழ்வாதாரங்களும் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட பின்பு, இந்திய அரசு நிவாரண நாடகத்தை அரங்கேற்றி 500 கோடி ரூபாயை ராஜபக்ஷேவுக்கு அள்ளிக் கொடுத்தது. போர் முடிந்து, ஈழம் எரிந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும், அங்குள்ள தமிழர் வாழ்வில் அமைதி தழைக்கவில்லை. சிங்கள ராணுவத்தின் மிருகவெறிச் செயல்கள் ‘சேனல் 4’ மூலம் உலகின் பார்வையில் பட்டதும் மனித உரிமை அமைப்பில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. தமிழகம் தந்த நிர்பந்தத்தால் தீர்மானத்தை ஆதரித்த இந்திய அரசு, ராஜபக்ஷேவை மகிழ்விக்கவும், சர்வதேச நாடு களிடம் இலங்கை அரசு தமிழருக்கு ஆற்றியுள்ள நற்பணிகளைப் பட்டியலிடவும் நாடாளுமன்றக் குழுவை அனுப்பி, நாடகத்தின் அடுத்த காட்சியை நடத்திக் காட்டியது.

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற 12 பேர் அடங்கிய குழு ஆறு நாட்கள் ஆய்வு மேற்கொண்டு இலங்கை அரசின் நிவாரணப் பணிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி, ராஜபக்ஷே சகோதரர்களுடன் விருந்து உண்டு இளைப்பாறி விட்டு இந்தியா திரும்பியது. ‘தமிழர்கள் சிங்களருடன் சமமாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்கேற்ப அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்டும். 13-வது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று ராஜபக்ஷே தன்னிடம் உறுதி அளித்ததாக சுஷ்மா தெரிவித்தார். இந்தக் குழுவில் இடம் பெற்ற காங்கிரஸ் நாயன்மார்கள் நால்வரும் சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளரிடம் தங்கள் சாதனைகளைப் பரிமாறிக்கொண்டனர். தோழர் ரங்கராஜன், ‘இலங்கைப் போரில் 35 ஆயிரம் பெண்கள் விதவையராகி விட்டதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் பேர், 23 வயதுக்கும் குறைவானவர்கள்’ என்ற கண்ணீர்ச் செய்தியைத் தெரிவித்ததுடன், ‘அங்கு உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வையே விரும்புகின்றன’ என்ற தகவலையும் தந்திருக்கிறார்.

‘ஒன்றுபட்ட இலங்கையில் சிங்களருக்குச் சம​மாகத் தமிழருக்கு அரசியல் உரிமைகளும் அதிகாரப் பகிர்வும் கிடைத்தால் போதும். தமிழ் ஈழம் தேவையற்ற பிரிவினை’ என்பதே காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கட்சிகளின் அணுகுமுறை. ஆனால், ஜெயலலிதாவும் கலைஞரும் ஈழ நாடகத்தில் இரு வேடமிட்டு நடிப்பதில் இணையற்றவர்கள். இருவரும் கலையுலகப் பின்புலத்தோடு களம் இறங்கியதால், மற்றவர்களைவிட இவர்களுடைய நடிப்பில்தான் நவரசங்களும் பளிச்சிடுகின்றன.

தனி ஈழம் காண ‘டெசோ’ கண்டவர் கலைஞர். ‘படை இங்கே… தடை எங்கே?’ என்று பரணி பாடி​யவர். கோட்டை நாற்காலி கொடுத்த ஞானத்தால், ‘ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வன்றித் தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை’ என்று தன் பாட்டின் பல்லவியை மாற்றிக்கொண்டவர். அதிகாரம் பறிபோனதும், ‘தனி ஈழமே என் தணியாத தாகம்’ என்று இன்று வீதி நாடகத்தில் வீரப்பண் இசைப்பவர். ஏமாளித் தமிழர்களுக்குக் காசில்லாத பொழுதுபோக்கு நம் கலைஞரின் தயவால் தொடர்கிறது.

ஜெயலலிதா, 2009-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது முள்ளிவாய்க்கால் சோகத்தில் மூழ்கிக் கிடந்தவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய, ‘இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தைப் பெறுவோம்’ என்று சங்கநாதம் செய்தவர். ‘அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்து அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றியைத் தந்தால், தமிழ் ஈழம் காண அடித்தளம் அமைப்பேன்’ என்று சபதம் பூண்டவர். ஆனால், இன்று முதல்வர் மகுடம் சூடிய பின்பு, ‘இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்​களாக நடத்தப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என்று தன்னிலை விளக்கம் தந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் ‘ஈழம்’… பதவியில் அமர்ந்தால் ‘அதிகாரப் பகிர்வு’ என்பதுதான் ஜெயலலிதாவும் கலைஞரும் போடும் இரு வேடங்கள். போகட்டும். அதிகாரப் பகிர்வே நல்லது என்று பேசுபவர்கள் சிந்தனைக்குச் சில செய்திகளைச் சமர்ப்பிப்போம்.

ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் செய்து​கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழருக்கு மிகக் குறைந்த அதிகாரங்களை வழங்கும் இந்த 13-வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் சோனியாவுக்கும், சுஷ்மாவுக்கும், காம்ரேடுகளுக்கும் ஒத்த கருத்து உண்டு. மன்மோகன் அரசின் நிலைப்பாடும் இதுதான். வாஜ்பாய் அரசின் விருப்பமும் இதுவேதான். ஆனால், ஒப்பந்தம் நிறைவேறி, 13-வது அரசியல் சட்டத் திருத்தம் அரங்கேறி 25 ஆண்டுகள் முடிந்த பின்பும் இலங்கையில் தமிழருக்கு மிகக்குறைந்த உரிமைகள்கூட இன்று வரை வழங்கப்படவில்லையே… ஏன்? இந்தியாவால் இலங்கையின் மீது எந்த அழுத்தத்தையும் இதுவரை செலுத்த முடியாத நிலையில் இனிமேல் அதிகாரப் பகிர்வு எப்படிச் சாத்தியமாகும்?

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தம் மாகாண அரசுக்கு நிதி நிர்வாகம் சம்பந்தப்பட்ட எந்த உரிமையையும் வழங்கவில்லை. மத்திய அரசை முழுமையாகச் சார்ந்தே மாகாண அரசு நிதியைப் பெற முடியும். அரசின் வருவாயை உயர்த்தும் எந்த நடவடிக்கையிலும் மாகாண அரசு ஈடுபடுவதற்கு உரிமை இல்லை. பொதுப் பட்டியலில் உள்ள எல்லா அம்சங்களிலும் மத்திய அரசின் முடிவே இறுதியானது. ‘தேசிய நலன்’ என்ற போர்வையில் மாகாண அரசுகளை அதிகாரமற்ற அலங்காரப் பொம்மைகளாக வைத்திருப்பதற்கே 13-வது திருத்தம் வழி வகுத்திருக்கிறது. ‘வடக்கு கிழக்குப் பகுதிகள் ஒன்றிணைப்பு’ பொதுவாக்கெடுப்பு(Referendum)மூலம் உறுதி செய்யப்படும் என்ற உருப்படியான ஓர் அம்சம்கூட இலங்கை உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு விட்டது. நிலம், காவல் துறை இரண்டின் மீதும் மாகாண அரசுக்கு உரிமை வழங்க இலங்கை அரசு தயாராக இல்லை. ஓர் உரிமையைக்கூட ஒழுங்காகத் தராத இந்த 13-வது திருத்தமே இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் ஒரு மாநில அரசுக்குரிய உரிமைகளை இலங்கை அரசு வடக்கிலும் கிழக்கிலும் எப்படி வழங்கக் கூடும்?

‘விடுதலைப் புலிகளின் பிரச்னைக்கு முற்றுப்​புள்ளி வைக்கப்பட்டதும், இலங்கை அரசு 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளோடு கூடுதலாகச் சில உரிமைகளையும் சேர்த்து வழங்கும் என்று உறுதியளித்த ராஜபக்ஷே, ’13 ப்ளஸ்’ என்று அதற்கு நாமகரணம் சூட்டினார். ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக 18-வது திருத்தத்தை அறிமுகப்படுத்தி 13-வது திருத்தம் வழங்கும் குறைந்த உரிமைகளையும் குழி தோண்டிப் புதைத்தார் என்பதை அதிகாரப் பகிர்வுக்குப் பரிந்துரை செய்யும் நம் அறிவுஜீவிகள் அறிவார்களா?

இலங்கை அரசின் 1978-ம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் அதிபராக ஒருவர் இரு முறைக்கு மேல் இருக்கக் கூடாது என்று விதித்திருந்த தடை 18-வது திருத்தம் மூலம் தகர்க்கப்பட்டது. தேர்தல் கமிஷன், தேசிய போலீஸ் கமிஷன், பொதுப் பணிக் கமிஷன், இலங்கை மனித உரிமைக் கமிஷன், ஊழல் விசாரணைக் கமிஷன் ஆகியவை சுயேச்சையாகச் செயற்படுவதில் தடை விதிக்கப்பட்டது. 17-வது திருத்தம் இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. நீதித்துறை, காவல்துறை நியமனங்கள் அதிபரின் அளவற்ற அதிகார வளையத்தில் வரு வதற்கேற்ப 17-வது திருத்தம், 18-வது திருத்தம் மூலம் மாற்றப்பட்டது. சுருங்கச் சொல்வதெனில், ராஜபக்​ஷேவை ஒரு சர்வாதிகாரிக்குரிய சகல குணாம் சங்களுடன் செயற்படுவதற்கு 18-வது திருத்தம் வழி வகுத்திருக்கிறது.

ராஜபக்ஷே திருமதி சுஷ்மாவிடம், ‘தமிழர்கள் சமத்துவத்தோடு கண்ணியமாக வாழும் வகையில் ’13 ப்ளஸ்’ விரைவில் நிறைவேறும்’ என்று வாக்குறுதி அளித்து விட்டாராம். ’25 ஆண்டு களாக நிறைவேற்றப்படாத 13-வது திருத்தம் எப்போது நிறைவேற்றப்படும் என்று கால வரம்பை உங்களிடம் அவர் அறிவித்தாரா?’ என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பதில் அளித்திருக்கிறார் சுஷ்மா. ராஜபக்ஷேவின் வாக்குறுதிகள் அனைத்தும் நீர் மேல் எழுத்துக்கள் என்பதற்கு எவ்வளவோ சான்றுகள் உள்ளன. இலங்கைப் பிரதமரே தலைமை நிர்வாகியாக இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் மாற்றி அமைக்கப்படும் என்ற ராஜபக்ஷே, ஜனாதிபதி ஆட்சியை மேலும் வலுப்படுத்தவே 18-வது திருத்தத்தை நிறைவேற்றினார்.

‘அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வுக்கு விரைவில் வழிவகுப்பேன்’ என்று 2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் ராஜபக்ஷே கூறினார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2010 ஜூலை மாதம், ’13 ப்ளஸ் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று சத்தியம் செய்தார். வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், ‘2012 ஜனவரி மாதம் அதிகாரப் பகிர்வு விரைவில் செயல்வடிவம் பெறும்’ என்று உறுதிமொழி வழங்கினார். இன்று சுஷ்மாவிடம், ‘விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும்’ என்று சபதம் செய்திருக்கிறார். அந்த ‘விரைவில்’ என்பது எப்போது என்று யாரறிவார் பராபரமே!

இந்திய நாடாளுமன்றக் குழு நாடு திரும்​பியதும், ‘இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமே எங்களால் அங்கீகரிக்க முடியாது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெறும் சாத்தியம் இல்லை. இலங்கை நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு (select committee) மட்டுமே எந்தத் தீர்வையும் தீர்மானிக்க முடியும். 13 ப்ளஸ் குறித்து நான் எந்த உறுதிமொழியும் தரவில்லை’ என்று அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜபக்ஷே கூறியதை சுஷ்மாவும் அவருடைய குழுவினரும் அறிவார்களா? 13-வது திருத்தத்தின்படி மாகாண வரம்புக்குட்பட்ட நிலமும், காவல் துறையும்கூட தமிழர் பகுதிகளுக்குத் தரப்படாதெனில் அதற்குப் பெயர் அதிகாரப் பகிர்வா? இதுதான் உண்மையான அரசியல் தீர்வா? இதைத்தான் ஈழத் தமிழர் வேண்டுவதாக நம் தோழர் ரங்கராஜன் சொல்கிறாரா? ஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாம் தர மக்களாகத்தான் தமிழர்கள் இருக்க வேண்டும் என்பது நம் தேசியக் கட்சிகளின் பெரு விருப்பமா?

ஈழத் தமிழர்களின் இன்னல் தீர்வதற்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். பதவி நாற்காலியில் அமர்ந்திருந்த​போது அதிகார மயக்கத்தில் இனஉணர்வை மறந்துவிட்ட கலைஞர், இப்போது தமிழீழ தாகம் கொண்டவராக மாறிவிட்டார். இனஉ​ணர்வும், தமிழ்ப் பற்றும்கொண்ட போராளி​யாய் கலைஞர் இறுதிவரை இருக்க வேண்டும் என்று தமிழகத்து வாக்காளர்கள் விரும்பினால்… மறந்தும் அவரை முதல்வராகவோ, தி.மு.க-வை ஆளும் கட்சியாகவோ மீண்டும் கொண்டுவர முயலக் கூடாது.

ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் இருபெரும் அரசியல் சக்திகளான ஜெயலலிதாவும் கலைஞரும் இணைந்து குரல் கொடுத்ததனால்தான், மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தது. இந்த இருவரும் சேர்ந்து அணி திரண்டால்தான், ஈழத் தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்திய அரசு வழி வகுக்கும். தமிழினம்தான் இருவருக்கும் பெரிய பேரும் புகழும் உருவாவதற்குக் காரணம். அதற்கு இவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு, ஒற்றைக் குரலில் ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்க்க முனைந்து செயற்படுவதுதான்.

‘ரத்தத்திலும் நெருப்பிலும் யுதேயா விழுந்தது. அதே ரத்தத்திலும் நெருப்பிலும் யுதேயா மீண்டும் எழும்’ என்று யூதர்கள் இசைத்தனர். இஸ்ரேல் பிறந்தது. மீண்டும் ரத்தமும் நெருப்பும் இல்லாமல் ஈழம் எழும். அதற்கு இந்தியாவின் துணை தேவை. இந்திய அரசை நிர்பந்திக்க தமிழகம் ஒன்றாய் நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

  1. Emmanuel Mallar

    கண்டிப்பா இல்ல சார் . இவனுக போய் நல்லா சாப்பிட்டு வருவானுங்க .
    தமிழனா நாம எல்லாம் ஒன்று படவோம் .

Leave a Reply

Your email address will not be published.