Tasmac

பொது முடக்கத் தளர்வின் போது 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்குத் தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. எத்தனை முறை கதறினாலும், எத்தனை பாதிப்புகளை எடுத்து வைத்தாலும், ஆண்ட அரசாக இருந்தாலும் சரி, தற்போது ஆளுகின்ற அரசாக இருந்தாலும் சரி, அவை அவர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை. கொரோனாக் காலத்தில் குடிமகன்கள் மது இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி ஓடிவிடவில்லை. தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவில்லை. என்றாலும் கவலைப்படுவது என்னவோ அரசுதான். 

கடந்தாண்டு மூன்றாவது முறையாக ஊரடங்கை மத்திய அரசு அமல் செய்தபோது, மாநில அரசுகள் கொரோனாத் தொற்று அதிகம் இல்லாத இடங்களில் மதுபானக் கடைகளைத் திறந்து கொள்ளலாம் என்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதைத் தொடர்ந்து 2020 மே 7 ஆம் தேதி தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் திருவிழாக் கூட்டம். இதை எதிர்த்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “ஊடரங்குக் காலம் முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது. ஆன்லைன் மூலம் மட்டும் விற்பனை செய்து கொள்ளலாம்,” என்று உத்தரவிடப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை ஆணையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மீண்டும் மதுபானக் கடைகள் 16ஆம் தேதி முதல் இயங்க ஆரம்பித்தன. சமூக அக்கறையோடு தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மக்கள் வரவேற்றார்கள். 

சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில், தற்போதைய முதல்வர், தன் இல்லத்தின் முன்பு கருப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கையில் கருப்புக்கொடியையும், மற்றொரு கையில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு? என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்ட பதாகையையும் ஏந்தியிருந்தார். அப்போது, ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கக் கூடாது, குடும்பங்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கவேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பியதும் நினைவில் இருக்கிறது. தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், தற்போதைய அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டணிக் கட்சிகள் யாவும், இதே கோரிக்கைக்காகக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆனால், இன்னும் கொரோனா முடிவுக்கு வரவில்லை. அப்போதிருந்ததை விட இப்போது நிலைமை பரவாயில்லை எனச் சொல்வதற்கில்லை அதற்குள் மதுக்கடைகளைத் திறக்க என்ன அவசரம்? அரசுக்கு, வருமானத்தை அதிகரிக்க வேறு வழி தெரியவில்லையா அல்லது வழிவகைகளை ஆராய விருப்பமில்லையா? நமக்குத் தெரியவில்லை. அரசுக்கு வருமானத்தை, சிக்கன நடவடிக்கை மூலமும், கனிம வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமும் அதிகரிக்க என்ன செய்யலாம் எனக் குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் உருவாக்கிய ‘ மது வருமானத்துக்கு மாற்றுத் திட்ட அறிக்கை’ ஏற்கனவே முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

குடும்பங்களில் அமைதியைக் குலைத்து, கொலை பாதகங்களை அதிகரித்து, குடி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டுகின்ற, இளம் விதவைகள் உருவாகக் காரணமாக இருக்கின்ற, சமூக அமைதியைக் கெடுத்து, அனைத்துக் குற்றங்களுக்கும் தாயாய் இருக்கின்ற குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்ட முனைப்பான திட்டங்கள் எதையும் முன்வைக்கும் நிலையில் அரசு இல்லை என்பதையே டாஸ்மாக் வேலை நேர அறிவிப்பு தெளிவாக்குகிறது. டாஸ்மாக் கடையை அத்தியாவசியமான சேவை என்று அரசு கருதுகின்ற போது, வருமானமே முக்கியம், மக்கள் நலம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் என்பதே அரசின் நிலைப்பாடு என்று நம்மை நினைக்க வைக்கிறது. அப்படியெல்லாம் நாங்கள் இல்லை என்பதை டாஸ்மாக் கடைகள் விஷயத்தில் சரியான முடிவு எடுத்து அரசு தன்னைத் திருத்திக் கொள்ளும் என்று காந்திய மக்கள் இயக்கம் நம்புகிறது. தி.மு.க.வின் தோழமை கட்சிகளும் அரசுக்கு எடுத்துரைக்கும் என நம்புகிறோம். 

Leave a Reply

Your email address will not be published.